பயம்


அமரனுக்கு தன் மகன் சிவா, திருமணத்துக்கு சம்மதிக்காமல் இருப்பது பெரும் கவலையாக இருந்தது. அமரன் ஒரு இதய நோயாளி. நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார். தான் நன்றாக இருக்கும் போதே தன் மகனுக்கு திருமணம் செய்துபார்க்க விரும்பினார்.

அமரனின் நண்பர்கள் மூலம் பல நல்ல இடத்து சம்மந்தங்கள் கூடி வந்தது. ஆனால் சிவா எதையும் ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. எல்லாவற்றையும் உதாசினப்படுத்தினான்.

இது அமரனுக்கு மேலும் மன அழுத்தத்தை கொடுத்தது. தான் படும் வேதனையை மகன் புரிந்துக்

கொள்ளவில்லையே என்று அமரன் ஒவ்வொரு நாளும் உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தார். இதை அறியாத சிவா, தன் போக்கில் வாழ்க்கையை தனி மரமாக ஓட்டிக்கொண்டிருந்தான்.

பொறுத்து, பொறுத்து பார்த்து அமரன் ஒரு முடிவுக்கு வந்தார்.

அன்று –

இரவு வீட்டுக்கு லேட்டாக வரும் சிவா நேராக கிச்சனுக்கு சென்றான். அங்கு சிவா சாப்பிடுவதற்கு அமரன் எதுவும் சமைத்து வைக்கவில்லை.

கிச்சனில் சாப்பாடு இல்லாமல் இருப்பதை பற்றி அப்பா அமரனிடம் ஒரு வார்த்தைகூட கேட்காத சிவா, வெறும் தண்ணீரைக் குடித்து விட்டு படுக்கப் போனான். அதைப்பார்த்த அமரனுக்கு ரத்தம் கொதித்தது.

“டேய்ய்ய்ய் சிவா...” என்று உரக்கக் கத்தினார்.

அப்பாவின் ஆக்ரோஷமான குரலைக்கேட்டு சற்றே திடுக்கிட்ட சிவா, “என்ன டாடி?” என்றான்.

“நான் ரொம்ப நாளா உன் கல்யாணத்தைப் பத்தி பேசிட்டு வரேன். ஆனா நீ இதுவரைக்கும் பதில் சொல்லாம இருந்தா எப்படி?... இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும்...”

“என்ன முடிவு, டாடி?!”

“நீ ஏன் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன்கிறே?”

“அம்மா செத்த பிறகு நீங்க ஏன் மறுக்கல்யாணம் பண்ணிக்கலை?”

“வர்றவ உன்னை சரியா கவனிச்சுக்க மாட்டான்னுதான்”

சிவா கலங்கியபடி அதைச் சொன்னான்... “நானும் அதுக்காகத்தான் பயப்படறேன் டாடி. எனக்கு வர்றவ உங்களை சரியா கவனிச்சுக்காம போயிட்டா...?!”

இதைக்கேட்ட அமரன் சிவாவை கட்டியணைத்தார்

No comments :

Post a Comment