மனசு

விவாகரத்து கிடைத்து விட்டது. நிர்மலா நீதிபதியை நன்றியோடு பார்த்தாள். நரேனின் முகம் வாடிப்போயிருந்தது. குமரன் மகளிடம் வந்தார்.

“இனி என்னம்மா பண்ணப் போறே?” என்று கேட்டார்.

“அப்பா!... என்னைக் கொஞ்சம் தனியா விடுங்க. ஆண்டவன் இருக்கான்!”

ஏனோ தெரியவில்லை. முதல் பார்வையிலே அவளுக்கு நரேனை பிடிக்காமல் போய்விட்டது. வீட்டில் சொல்லிப் பார்த்தாள். எடுபடவில்லை. அப்பா பிடிவாதமாக இருந்தார். கல்யாணத்தை முடித்தார்.

ஒட்டுதல் இல்லாமலே ஆரம்பித்த வாழ்க்கை. வெறுப்பைத்தான் தந்தது. அவள் மனசை தொடும் விதமாக நரேன் இல்லை. அதற்கு அவன் முயற்சி செய்யவும் இல்லை. வாழ்க்கையை ரசித்து வாழ விரும்பியவள் நிர்மலா. அது முடியாமல் போகவே விவாகரத்துக்கு அடிப்போட்டாள். எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அவள் உறுதியாய் இருந்தாள்.

இன்று நினைத்ததை சாதித்து விட்டாள். நிர்மலா அப்பாவுடன் கோர்ட்டுக்கு வெளியே வந்தாள்.

நரேன் அவளிடம் வந்தான்.

“உன் பிடிவாதத்தால நீ விவாகரத்து வாங்கிட்டே. ஆனா, இனி நீ என்ன பண்ணுவே?... அதான் எனக்கு தெரிஞ்ச கம்பனியில உனக்கு ஒரு நல்ல வேலைக்கான அப்பாயின்மென்ட் ஆர்டரை வாங்கிட்டு வந்தேன். கை நிறைய சம்பளம். நீ நினைச்சபடி வாழலாம். ஆல் த பெஸ்ட்!”

அவள் கையில் கவரை திணித்து விட்டு நரேன் நடந்தான். முதல் முறையாக தன் மனதை தொட்ட அவனை நிர்மலா பார்க்கும் போது அவன் படி இறங்கி சென்றுகொண்டிருந்தான்!

No comments :

Post a Comment