மனசு

விவாகரத்து கிடைத்து விட்டது. நிர்மலா நீதிபதியை நன்றியோடு பார்த்தாள். நரேனின் முகம் வாடிப்போயிருந்தது. குமரன் மகளிடம் வந்தார்.

“இனி என்னம்மா பண்ணப் போறே?” என்று கேட்டார்.

“அப்பா!... என்னைக் கொஞ்சம் தனியா விடுங்க. ஆண்டவன் இருக்கான்!”

ஏனோ தெரியவில்லை. முதல் பார்வையிலே அவளுக்கு நரேனை பிடிக்காமல் போய்விட்டது. வீட்டில் சொல்லிப் பார்த்தாள். எடுபடவில்லை. அப்பா பிடிவாதமாக இருந்தார். கல்யாணத்தை முடித்தார்.

ஒட்டுதல் இல்லாமலே ஆரம்பித்த வாழ்க்கை. வெறுப்பைத்தான் தந்தது. அவள் மனசை தொடும் விதமாக நரேன் இல்லை. அதற்கு அவன் முயற்சி செய்யவும் இல்லை. வாழ்க்கையை ரசித்து வாழ விரும்பியவள் நிர்மலா. அது முடியாமல் போகவே விவாகரத்துக்கு அடிப்போட்டாள். எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அவள் உறுதியாய் இருந்தாள்.

இன்று நினைத்ததை சாதித்து விட்டாள். நிர்மலா அப்பாவுடன் கோர்ட்டுக்கு வெளியே வந்தாள்.

நரேன் அவளிடம் வந்தான்.

“உன் பிடிவாதத்தால நீ விவாகரத்து வாங்கிட்டே. ஆனா, இனி நீ என்ன பண்ணுவே?... அதான் எனக்கு தெரிஞ்ச கம்பனியில உனக்கு ஒரு நல்ல வேலைக்கான அப்பாயின்மென்ட் ஆர்டரை வாங்கிட்டு வந்தேன். கை நிறைய சம்பளம். நீ நினைச்சபடி வாழலாம். ஆல் த பெஸ்ட்!”

அவள் கையில் கவரை திணித்து விட்டு நரேன் நடந்தான். முதல் முறையாக தன் மனதை தொட்ட அவனை நிர்மலா பார்க்கும் போது அவன் படி இறங்கி சென்றுகொண்டிருந்தான்!

ஏக்கம்

உணவு இடைவேளைக்கான மணி ரீங்காரமிட்டது. மழலையர் பள்ளிக்குள் ஸ்வேதா சாப்பாடு கூடையுடன் நுழையும்போதே வாட்ச்மேன் தடுத்தார். “ம்மா, இன்னைக்கு கரஸ்பாண்டன்ட் வந்திருக்காங்க. நீங்க உங்க குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விடறதை பார்த்தாங்கன்னா பிரச்சினை ஆயிடும். ப்ளீஸ், சாப்பாட்டை எங்கிட்ட கொடுத்துட்டு போயிடுங்க!” என்று கெஞ்சினார்.

“என்னப்பா சொல்ற. என் மகளை இங்க சேர்த்ததில் இருந்து நான்தான் அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுட்டுப் போறேன். அதுவுமில்லாம, ஹெச்.எம். என் கூட படிச்ச தோழி. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்று அவரை அலட்சியப்படுத்திவிட்டு உள்ளே சென்ற ஸ்வேதா தனக்காக காத்திருந்த மகளுக்கு சாப்பாடு ஊட்ட ஆயத்தமானாள்.

அப்போது அங்கு வந்து நின்றாள் கரஸ்பாண்டன்ட் சித்ரா. அவளைப் பார்த்ததும் ஸ்வேதா படபடப்பானாள்.

“ஏம்மா, நீங்க ஹவுஸ் வொய்ஃபா?” சித்ரா கேட்டாள்.

“யெஸ் மேம்” சிறுநடுக்கம் அவளையும் அறியாமல்.

“உங்க வீடு பக்கத்துல இருக்கா?”

“எப்படி மேம் கண்டுபிடிச்சிங்க?”

டென்ஷனில் இருந்த சித்ரா ஸ்வேதாவின் ஆர்வத்தை குப்பையில் தள்ளிவிட்டு, “இதை கண்டுபிடிக்கிறது பெரிய வித்தையா? உங்க வீடு பக்கத்துல இருக்கறதாலயும், நீங்க ஹவுஸ் வொய்ஃபா இருக்கறதாலயும் பொழுது போக்கா உங்க குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிவிட வந்துடறீங்க. ஆனா, மத்த பிள்ளைங்களோட அம்மாக்களுக்கு அந்த மாதிரி இல்லை. ஒவ்வொருத் தருக்கும் ஒரு நெருக்கடி. நிக்கக்கூட நேரமில்லாம ஓடிக்கிட்டு இருக்காங்க. அவங்களால நேரத்துக்கு இங்க வந்து குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுட்டு போக முடியுமா?

அவங்க பிள்ளைகள் எல்லாம் தானா சாப்பிடும்போது உங்க குழந்தைக்கு மட்டும் நீங்க கொஞ்சி, கொஞ்சி தினம் சாப்பாடு ஊட்டிட்டு போனா, அதைப் பாக்கிற மத்த குழந்தைங்க மனசு என்ன பாடுபடும். ஒரு அம்மாவா உங்களால புரிஞ்சுக்க முடியலையா?”

சித்ரா கேள்விக்கு ஸ்வேதாவிடம் பதில் இல்லை. இனி சாப்பாடு ஊட்ட வருவதில்லை என்கிற முடிவுக்கு ஸ்வேதா வந்தாள்.

சிரிப்பொலி

நல்ல மழை.வானம் தூறிக்கொண்டே இருந்தது. மின்சாரம் வேறு இல்லை. ஒரே இருட்டாகவும் இருந்தது.கைத்தொலைபேசியில் மணியை பார்த்தான் சுப்பையா. அது எட்டை காட்டியது.

‘காலையிலிருந்து ஒரு போன் வரல. இதுக்கு வேற அப்பப்போ காசு போட வேண்டியிருக்கு. மணிபாக்கத்தான் இது லாயக்கு, இனிமேல் யாரு நம்ம கடைக்கு வரப்போகிறார்கள்’ என்று நினைத்தபடி கடையை அடைக்கும் முயற்சியில் இறங்கினான்.

சுப்பையா ஒரு நடுத்தரவாதி. ஊர் ஒதுக்குப்புறத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துபவன். அவன் கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் அவன் வீடு. மனைவி, பத்தாவது படிக்கும் ஒரு மகன் என்று குடும்பத்தை வைத்திருப்பவன்.

மாலை வீட்டிலிருந்து தேநீர் வந்த தூக்கு வாளியைஎடுத்து ஒரு துணிப்பைக்குள் வைத்தவன், மழையில் நனைந்து விடுமோ என்ற கவலையில் தன் அலைபேசியையும் ஒரு பேப்பரில் சுற்றி கவனமாக அந்த துணிப்பைக்குள் வைத்தான். வெளியில் வந்து தன் சைக்கிளை நகட்டினான். சைக்கிளில் காற்று இறங்கி போயிருந்தது.

‘சே....இந்த நேரத்தில் இப்படி பழிவாங்கிவிட்டதே’ என்றவாறு சைக்கிளை கடையிலேயே வைத்து பூட்டிவிட்டு நடக்கலானான். இருட்டைப் பார்த்ததும் ஒருவித பயம் அவனுள் தொற்றியது. இன்று மதியம் இவன் பார்த்த இறந்து போன ஒரு குழந்தையின் சவ ஊர்வலம் வேறு நினைவிற்கு வந்து அவனை மேலும் பீதிக்குள்ளாக்கியது.

நடையை இன்னும் வேகமாக்கினான். திடீர் என்று ஒரு குழந்தையின் சிரிப்பொலி மிக அருகில் கேட்டது. ஒரு வித கலக்கத்துடன் ‘மதியம் பார்த்த சவ ஊர்வலத்தையே நினைத்துக்கொண்டு நடந்ததால் பிரம்மையாக இருக்கும்’ என்று நினைத்தபடி சிறிது நேரம் நின்றான்.

இப்போது சிரிப்பொலியை காணோம். மறுபடியும் நடக்கலானான். சிறிது தூரம் சென்றிருப்பான். மீண்டும் அதே குழந்தையின் சிரிப்பு சத்தம். இவன் பயத்தில் ஓட ஆரம்பித்தான். கூடவே வந்தது அந்த சத்தமும். ஒரு வழியாக வீட்டை அடைந்தான்.

“என்னங்க.... சீக்கிரமே கடையை அடச்சுட்டீங்க போல”

“மழை வேற... கரண்டும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. அதான் நேரத்தோட அடச்சுட்டேன்”

“அதாங்க.... வரும்போது மெழுகுவர்த்தி வாங்கி வரச் சொல்லலாம்ன்னு உங்களுக்கு போன் அடிச்சேன். எடுக்கவே இல்லை. ஏன் போன கடையிலேயே வச்சுட்டு வந்துட்டீங்களா?”

“இல்லையே நனைஞ்சாலும் நனைஞ்சுரும்ன்னு பையில்தான் இருக்கு. நீ போன் அடிக்கவே இல்லையே”

“நான் அடிச்சேன் உங்களுக்கு விளங்கல போல....”

“இல்ல... நீ போன் போடவே இல்ல... நான் பக்கத்துலதான வச்சுருந்தேன்.”

“இல்லைங்க காலையில நம்ம பய உங்க போன எடுத்து என்னவோ பண்ணிட்டு இருந்தான். அதான் ஏதும் ஆச்சோ... எதுக்கும்... நீங்க போன எடுத்து பாருங்க தெரியும்.”

“அப்பா நான் ஒண்ணும் பண்ணல. ரிங் டோன் தான் மாத்திவச்சேன்” என்றான் அவன் மகன்.

“எதுக்கும் இப்ப ஒரு தடவ போன் போடு. பாத்திடலாம்."

போன் அடித்தாள். அங்கே ரிங் டோனாக வந்தது அந்த குழந்தையின் சிரிப்பொலி.

அழகு

தரகர் கொண்டு வந்து கொடுத்த படத்தில் இருந்ததை விட நேரில் இன்னும் சுமாராகத் தான் இருந்தாள் மேனகா. மாதவன், திருப்தி இல்லாதவனாய் நிமிர்ந்து தன் அம்மா அப்பாவைப் பார்த்தான். அவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷமும் பெண் வீட் டாரிடம் மேற்கொண்டு செய்தி களைப் பேசுவதுமாக இருந்ததை யும் பார்க்கும் பொழுது, இந்த இடம் அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்பதைப் பறைசற்றியது.

என்ன செய்யலாம் என்ற யோசனையுடன் தாயைத் தனி யாக வெளியில் அழைத்து வந்தான்.

“அம்மா... தரகர் இன்னொரு பெண்ணோட படத்தைக் காட்டி னார் இல்லையா? அந்தப் பெண் ணையும் பார்த்துடலாம்” என்றான் மாதவன்.

அம்மாவிற்குக் கொஞ்சம் ஏமாற்றம். இருந்தாலும் சமாளித் துக்கொண்டு, “சரிப்பா, பார்த்தி டலாம்... ஆனால் இந்தப் பெண்ணே நல்ல குடும்பப் பாங்கா இருக்கிறா. குடும்பமும் நல்ல குடும்பமா தெரியுது. உனக்கும் ஏத்த ஜோடியாவும் தெரியுது. மீதி எல்லாமே பொருந்தி வருது...” என்று பேச்சை இழுத்தாள்.

“நான் அந்தப் பெண்ணையும் பார்க்கணும். அவ படத்துலே இவளை விட அழகா இருந்தாள். எனக்கு அவளைக் காட்டுங்கள்” என்று பிடிவாதமாகச் சொன்னான் மாதவன்.

வேறு வழியில்லை. அனை வரும் அந்தப்பெண்ணைப் போய்ப் பார்த்தார்கள். உண்மை யில் மேனகாவை விட இந்தப் பெண் மதுமிதா அதிக அழகாக இருந்தாள். மாதவனுக்குப் அவளைப் பார்த்ததும் பிடித்து விட்டது. பெண் வீட்டாரும் கல கலப்பாக பழகினார்கள். கிளம்பும் போது “வீட்டிற்கு போய் பேசி விட்டு தரகரிடம் பதில் சொல்லி அனுப்புகிறோம்” என்று சொல்லிவிட்டு வந்தார்கள்.

வீட்டிற்கு வந்ததும் “அப்பா... எனக்கு இந்த மதுமிதாவையே பேசி முடியுங்கள்” என்றான் மாத வன்.

“சரிப்பா... ஆனால் அந்த பெண் மேனகாவிற்கு என்ன காரணத்தைச் சொல்வது?” யோசனையுடன் கேட்டார் அப்பா.

“பிடிக்கவில்லை என்ற பிறகு என்ன காரணம் சொன்னால் என்ன? ஜாதகம் சரியில்லை என்று சொல்லிவிடுங்கள்” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றான்.

உடனே தரகரை வரவழைத்தார் அப்பா. அவரிடம், “மதுமிதா வீட் டிற்குப் போய் எங்களுக்குச் சம்மதம்னு சொல்லிடுங்க” என்றார்.

அவர் கொஞ்சம் தயங்கி நிற்கவும்... “என்ன தயக்கம்?” என்று கேட்டார்.

“அது வந்துங்க.... அந்த மதுமிதா வீட்டு சம்மந்தம் வேண் டாங்க. தம்பிக்கு வேற இடம் காட்டுறேங்க” என்றார் தரகர்.

“இல்லப்பா... தம்பிக்கு இந்த இடம் பிடிச்சிருக்காம். இதையே முடிக்கலாம்” என்றார் அப்பா.

“அது முடியாதுங்க.”

“ஏன்...?”

“ஏதோ பொருத்தம் பத்த லைன்னு சொன்னாங்க.”

இதைச் சற்றும் எதிர்பார்க் காத அப்பா யோசித்தபடி, “இது உண்மையான காரணமா இருக்க முடியாது. ஏற்கனவே ராசி நட்சத்திரம் எல்லாம் பொருந்தி வந்த ஜாதகம்ன்னு சொல்லித் தானே பொண்ணோட படத்தைக் காட்டினீங்க.பிறகென்னவாம்” என்று சற்று காரமாக கேட்டார்.

“அது வந்துங்க, உங்க பிள்ளை... அந்த பொண்ணுக் கேத்த அழகு இல்லை யாம். அதனால பொண்ணுக் குப் பிடிக்கலையாம்" என்று கிசு கிசுப்பாகச் சொன்னார் தரகர்.

அப்பா பெருமூச்சுடன் அமர்ந் தார். தன் அறைக்குள்ளிருந்து இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டி ருந்த மாதவன் நிலைகண்ணாடி யைப் பார்த்தான்.

அடுத்தவர் வந்து சொல்லும் வரையில் ஒவ்வொருவரும் அவர வருக்கு அழகுதான்.

மருமகள்

அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று அண்ணனின் போன் வந்ததும் சங்கர் அப்பாவைப் பார்க்க கிராமத்துக்கு கிளம்பினான்.

ஆபீஸில் இருக்கும் போது போன் வந்ததால், மனைவி சித்ராவிடம் கூட சொல்லாமல் கிராமத்துக்கு சென்றான். அங்கிருந்து மனைவிக்கு போன் செய்து தான் ஊருக்கு வந்திருப்பதைச் சொன்னான்

அடுத்தநாள் மாலை ஊரில் இருந்து கிளம்பி திங்கள்கிழமை நேராக அலுவலகத்துக்கு சென்றான் சங்கர். இரவு வீடு திரும்பியவனுக்கு அதிர்ச்சி. வீட்டில் மனைவி சித்ரா இல்லை. குழந்தைகள் பள்ளியை விட்டு வந்து பள்ளி சீருடையைக் கூட மாற்றாமல் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

அதைப் பார்த்த சங்கருக்கு எரிச்சலாக வந்தது. வீட்டிலிருந்த வேலைக்காரியிடம் “அவ எங்க போய் தொலைஞ்சா...?” என்று கத்தினான்.

“எனக்கு தெரியாது, சார்!... காலையில யாருக்கோ போன் பண்ணாங்க. உடனே ‘நான் அவசரமா வெளியப் போகணும். நான் வர்றவரைக்கும் பிள்ளைங்களைப் பார்த்துக்கோ’ன்னு மட்டும் சொல்லிட்டுப் போனாங்க!" என்று அவள் சொல்ல உடனே சித்ராவின் ‘செல்’லுக்கு சங்கர் போன் செய்தான்.

சித்ரா போனை எடுத்ததும், “வீட்ல இல்லாம நீ எங்க போய் தொலைஞ்சே...!?” கடுப்புடன் கத்தினான்.

“உங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டதும், உடனே பேருக்குன்னு போய் பார்த்துட்டு அம்போன்னு அந்த கிராமத்துல வசதியில்லாத உங்க அண்ணனை நம்பி விட்டுட்டு வந்திட்டீங்க. அதான் நான் கிளம்பி வந்து சிட்டியில நல்ல ஹாஸ்பிட்டல்ல அவரை சேர்த்திருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன். அதுவரைக்கும் நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. ப்ளீஸ்!” என்றாள்.

இதைக் கேட்டதும் குற்ற உணர்ச்சியில் சங்கர் தலை குனிந்தான்.

ஒரு நிமிடக் கதை

“சிவா எங்கே இருக்கீங்க?” கேட்டவர் பெரிய தொழிலதிபர் மாணிக்கம்.

“வீட்லதான் சார்”

“நான் உங்க ஆபீஸ் வாசலில்தான் வெயிட் பண்றேன். சீக்கிரம் வாங்க. உங்ககிட்டே ஒரு முக்கியமான வேலையை ஒப்படைக்கணும். அதுக்கு அட்வான்ஸா அம்பதாயிரம் ரூபாயை இப்ப வந்து வாங்கிக்கங்க.”

“இதோ வர்றேன் சார்.”

‘அடடா.. நாம பணக்கஷ்டத்தில் இருக்கோம்னு கடவுள் நமக்காக ஒரு ஆளை உதவி செய்ய அனுப்பியிருக்கார்’ என்று நினைத்தபடி வண்டியை எடுத்தான் சிவா. வரும் வழியில் ஓரிடத்தில் கசகசவென்று கூட்டம். சிவா தன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு எட்டிப்பார்த்தான். அங்கே பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பையன் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.

“ஏங்க பையன் யாரு? என்னாச்சு?”

“தெரியல. லாரிக்காரன் இடிச்சுட்டு போயிட்டான்”

“108-க்கு போன் பண்ணியாச்சா?”

“அரை மணி நேரமாச்சு. இன்னும் வரல”

‘பேசாம நாமளே கொண்டு போய் ஹாஸ்பிடல்ல சேர்த்துடுவோமா?, அய்யய்யோ அங்கே சார் வேற வெயிட் பண்ணிக்கு இருக்காரே. அவர் கொடுக்கறதா சொன்ன பணத்தை வச்சுத்தான் இன்னைக்கு சில கமிட்மென்ட்டை செட்டில் பண்ணலாம்னு நினைச்சேன்'

இப்படி பல யோசனைக்கு பின் ஒரு முடிவுக்கு வந்தான் சிவா. ஒரு ஆட்டோவை நிறுத்தியவன் யார் உதவிக்கும் காத்திராமல் அந்த பையனை தூக்கி ஆட்டோவில் கிடத்தி ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் சேர்த்தான். அப்போது சிவாவின் போன் அலறியது. மாணிக்கம்தான் அழைத்தார்.

“ஹலோ சிவா. இன்னும் வரலையா?”

“சாரி சார். வரும் வழியில் ஒரு ஆக்ஸிடென்ட். ஒரு பையன் அடிபட்டு கிடந்தான். அவனை அப்படியே போட்டுட்டு வர மனசு வரல. அதான் மருத்துவமனைக்கு கொண்டுவந்தேன்.”

“முட்டாள் மாதிரி பேசாதீங்க. எனக்கு எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா? அதையெல்லாம் விட்டுட்டு உங்களுக்காக இங்கே காத்திட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா சமூக சேவை செஞ்சிட்டு இருக்கீங்க. உங்க ஆர்டரே வேண்டாம். கேன்சல் பண்ணிக்குவோம். நான் கிளம்பறேன்”

“சார் ஒரு நிமிஷம்” என்று பரிதாபமாக சொன்னவனை கண்டுக்காமல் எதிர்முனை பட்டென்று கட் ஆனது.

மருத்துவமனையில் பார்மாலிட்டியை முடித்ததும் வீட்டுக்கு கிளம்பினான். வேலை ஓடவில்லை. அடிபட்ட பையன் நிலைமை எப்படி இருக்கோ என்று நினைத்தவன் திரும்பவும் மருத்துவமனைக்கு போனான். அங்கு மாணிக்கம் நின்றார். அங்கிருந்த வார்டு பாய் மாணிக்கத்திடம் சிவாவை கைகாட்டி, “சார். காலைல உங்க பையனை இங்கே கொண்டு வந்து சேர்த்தது இவருதான் சார்.” என்றார்.

மாணிக்கம் கண்கள் கலங்கியபடி சிவாவின் கையை பிடித்தார். “ரொம்ப நன்றி சிவா. நீங்க காப்பாத்துனது என் பையனைத்தான். நான் அப்படி பேசியது தவறுதான். என்னை மன்னிச்சுக்கங்க. இந்தாங்க அம்பதாயிரம் ரூபாய். வச்சுக்கங்க. இந்த பணம் வேலைக்கு அட்வான்ஸ் இல்லை. என் பையனை காப்பாத்தினதுக்கு.”

“மன்னிக்கணும். நான் மனிதாபிமான அடிப்படையில்தான் இந்த உதவியை செய்தேன். பணத்தை எதிர்பார்த்து அல்ல.”

“அப்படின்னா வேலைக்கு அட்வான்ஸா வச்சுக்கங்க.”

“இல்லே சார். உங்க மகன்னு தெரிஞ்சதால நீங்க இப்படி பேசுறீங்க. வேறு ஆளா இருந்திருந்தா எனக்கு இந்த வேலையை கொடுத்திருக்க மாட்டீங்க. என் நியாயத்தையும் காது கொடுத்து கேட்டிருக்க மாட்டீங்க...ஆனால் நான் உங்க பையனை யார்னே தெரியாமத்தான் இங்கே கொண்டு வந்து சேர்த்தேன். என்னை பொறுத்தவரைக்கும் மனித உயிரைவிட பணம் முக்கியமில்லை. இப்ப நீங்க கொடுக்கற இந்த வேலையே உங்க பையனை காப்பாத்தியதால்தானே தவிர, என் மனிதாபிமானத்துக்காக இல்ல... அதனால இந்த வேலையை நான் செய்யறதா இல்லை. என்னால உங்க அரை மணி நேரத்தை திருப்பி கொடுக்க முடியாதுதான். ஆனால் உங்க அரை மணி நேரம் எந்த உயிரையும் திரும்ப கொண்டுவந்திடாது” சொல்லிவிட்டு திருப்தியுடன் நடந்தான் சிவா.

சமையல்காரர்

திருமண வீட்டில் சமையலை முடித்துவிட்டு அலுத்துப்போய் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார் கனகசபை. அப்பாடா என்று சேரில் அமர்ந்தவர் மனைவியிடம் கூறினார், “கனகா! இந்த சமையல்காரப் பொழைப்பு என்னோட போகட்டும், நம்ம பையனை பெரிய இன்ஜினீயர் ஆக்கணும்.”

“ஆமாங்க நீங்க சொல்றது சரிதான். இப்படி அடுப்புல வெந்து சாகிற பொழைப்பு உங்க பரம்பரையில உங்களோட முடியட்டும்” என்றாள் கனகா.

நாட்கள் ஓடின. மகன் சிவராமன் பிளஸ்2-வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்வாகியிருந்தான்.

“ஏம்பா எந்த காலேஜ்ல இன்ஜினீயரிங் அப்ளிகேஷன் வாங்கியிருக்க?” என்று கேட்டார் கனகசபை.

“மன்னிச்சிருங்கப்பா. நான் இன்ஜினீயரிங் படிக்க விரும்பலை.”

மகன் கூறியதும் பதறிப் போனார் கனகசபை. தன் கனவை மகன் சிதைத்துவிடுவானோ என்று பதறியது அவர் மனம்.

“சிவராமா! நீ இன்ஜினீயரிங் படிக்கணும்கறது அப்பாவோட கனவுப்பா. அதை கலைச்சிடாதடா கண்ணா” மகனிடம் வாஞ்சையுடன் கூறினார்.

தாழ்ந்த குரலில் தந்தைக்கு பதில் கூறினான் சிவராமன்.. “அப்பா.. இன்ஜினீயர் படிப்பு ஒரு காலத்துல பெரிய படிப்புதான். இல்லைன்னு சொல்லல. ஆனா இப்ப தெருவுக்குத் தெரு இன்ஜினீயரிங் காலேஜ் மலிஞ்சு போச்சு. இன்ஜினீயர்களுக்கு வேலை கிடைக்கிறது குதிரைக் கொம்பா ஆயிடுச்சுப்பா.”

“சரி, வேற என்ன படிக்கலாம்னு இருக்க?”

“கேட்டரிங் டெக்னாலஜி.”

மகன் சொன்னதும் தூக்கி வாரிப் போட்டது கனகசபைக்கு.

“ஏம்பா இந்த சமையல் வேலை என்னோட போகட்டும்னு நானும் உங்க அம்மாவும் நெனைக்கிறோம், நீ என்னடான்னா வாழையடி வாழையா இந்தப் பொழைப்புக்கே வரணும்னு துடிக்கிறியே?”

“அப்பா சமையல்னா கேவலமாப்பா? ஊருல கேட்டுப் பாருங்க கனகசபை சமையலப் பத்தி. உங்க சமையல்னா ஊர் சனம் ஒன்பது பந்தி கழிஞ்சும் காத்திருந்து சாப்பிட்டுட்டு போகும். ருசியா சமைக்க உங்களைப்போல ஒண்ணு ரெண்டு பேர்தாம்பா ஊர்ல இருக்காங்க. உங்க சமையல் கலை உங்களோட அழிஞ்சுபோயிடக் கூடாது.அதுக்கு வாரிசா நான் வரணும். அதுக்காகத்தான் கேட்டரிங் டெக்னாலஜி படிக்கறேன். ஏட்டுப் படிப்போட உங்க அனுபவ பாடமும் சேர்ந்தா நாட்டிலேயே நான் பெரிய சமையல் கலைஞனா ஆயிடுவேன். ஆயிரம் இன்ஜினீ யர்கள் எளிதா உருவாகிடுவாங்க. ஆனா வாய்க்கு ருசியா சமைக்க ஒரு கனகசபை உருவாகிறது ரொம்ப கஷ்டம்பா. நான் ஒரு கனகசபையா உருவாக விரும்புறேன்” என்றவாறு கேட்டரிங் படிப்புக்கான விண்ணப்ப படிவத்தை தந்தையின் காலில் வைத்து வணங்கினான் சிவராமன்.

“ரொம்ப நல்லா வருவப்பா” என்று கண்ணீர் மல்க மகனை ஆசீர்வதித்தார் கனகசபை.